Ezekiel-33 – எசேக்கியேல்-33
1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2. மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரோடே பேசி, அவர்களோடே சொல்லவேண்டியதாவது: நான் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணுகையில் தேசத்தின் ஜனம் தங்கள் எல்லைகளிலுள்ள ஒருவனை அழைத்து, அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக வைத்தபின்பு,
3. இவன் தேசத்தின்மேல் பட்டயம் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, ஜனத்தை எச்சரிக்கும்போது,
4. எக்காளத்தின் சத்தத்தக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாயிராமல், பட்டயம் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் சுமரும்.
5. அவன் எக்காளத்தின் சத்தத்தைக்கேட்டும், எச்சரிக்கையிருக்கவில்லை; அவனுடைய இரத்தப்பழி அவன்பேரிலே சுமரும்; எச்சரிக்கையாயிருக்கிறவனோ தன் ஜீவனைத் தப்புவித்துக்கொள்ளுவான்.
6. காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.
7. மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.
8. நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்திலிராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.
9. துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும் அவன் தன் வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.
10. மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: எங்கள் துரோகங்களும் எங்கள் பாவங்களும் எங்கள்மேல் இருக்கிறது, நாங்கள் சோர்ந்துபோகிறோம், நாங்கள் பிழைப்பது எப்படியென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
11. கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு.
12. மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரை நோக்கி: நீதிமான் துரோகம்பண்ணுகிற நாளிலே அவனுடைய நீதி அவனைத் தப்புவிப்பதில்லை; துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன் அக்கிரமத்தினால் விழுந்துபோவதுமில்லை; நீதிமான் பாவஞ்செய்கிற நாளிலே தன் நீதியினால் பிழைப்பதுமில்லை.
13. பிழைக்கவே பிழைப்பாய் என்று நான் நீதிமானுக்குச் சொல்லும்போது, அவன் தன் நீதியை நம்பி, அநியாயஞ்செய்தால், அவனுடைய நீதியில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை, அவன் செய்த தன் அநியாயத்திலே சாவான்.
14. பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன் பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியுஞ்செய்து,
15. துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக்கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
16. அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.
17. உன் ஜனத்தின் புத்திரரோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல.
18. நீதிமான் தன் நீதியைவிட்டுத் திரும்பி, அநியாயஞ்செய்தால், அவன் அதினால் சாவான்.
19. துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.
20. நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் வீட்டாரே நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படியே நியாயந்தீர்ப்பேனென்று சொல் என்றார்.
21. எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருஷம் பத்தாம் மாதம் ஐந்தாந்தேதியிலே எருசலேமிலிருந்து தப்பின ஒருவன் என்னிடத்தில் வந்து: நகரம் அழிக்கப்பட்டது என்றான்.
22. தப்பினவன் வருகிறதற்கு முந்தின சாயங்காலத்திலே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வருமட்டும் என் வாயைத் திறந்திருக்கப்பண்ணிற்று; என் வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மௌனமாயிருக்கவில்லை.
23. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
24. மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தின் பாழான இடங்களிலுள்ள குடிகள்: ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்; நாங்கள் அநேகராயிருக்கிறோம், எங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டது என்று சொல்லுகிறார்கள்.
25. ஆகையால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் இரத்தத்தோடே கூடியதைத் தின்று, உங்கள் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக உங்கள் கண்களை ஏறெடுத்து, இரத்தத்தைச் சிந்தியிருக்கிறீர்கள், நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ?
26. நீங்கள் உங்கள் பட்டயத்தை நம்பிக்கொண்டு, அருவருப்பானதைச் செய்து, உங்களில் அவனவன் தன்தன் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்துகிறீர்கள்; நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.
27. நீ அவர்களை நோக்கி: பாழான இடங்களில் இருக்கிறவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; வெளிகளில் இருக்கிறவனை மிருகங்களுக்கு இரையாக ஒப்புக்கொடுப்பேன்; கோட்டைகளிலும் கெபிகளிலும் இருக்கிறவர்கள் கொள்ளைநோயால் சாவார்கள்.
28. நான் தேசத்தைப் பாழும் அவாந்தரமுமாக்குவேன்; அப்பொழுது அதினுடைய பெலத்தின் பெருமை ஒழிந்துபோகும்; அப்பொழுது இஸ்ரவேலின் மலைகள் கடந்துபோவாரில்லாமல் அவாந்தரமாய்க் கிடக்கும்.
29. அவர்கள் செய்த அவர்களுடைய எல்லா அருவருப்புகளினிமித்தமும் நான் தேசத்தைப் பாழும் அவாந்தரமுமாக்கும்போது நான் கர்த்தரென்று அறிந்துகொள்வார்கள், இதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.
30. மேலும் மனுபுத்திரனே, உன் ஜனத்தின் புத்திரர் சுவர் ஓரங்களிலும் வீட்டுவாசல்களிலும் உன்னைக்குறித்துப் பேசி, கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம் வாருங்கள் என்று ஒருவரோடொருவரும் சகோதரனோடே சகோதரனும் சொல்லி,
31. ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது.
32. இதோ நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாயிருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமற்போகிறார்கள்.
33. இதோ, அது வருகிறது, அது வருகையில் தங்கள் நடுவிலே ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Bible