Isaiah-14 – ஏசாயா-14

Isaiah-14 – ஏசாயா-14

1. கர்த்தர் யாக்கோபுக்கு இரங்கி, பின்னும் இஸ்ரவேலரைத் தெரிந்துகொண்டு, அவர்களை அவர்கள் தேசத்திலே தாபரிக்கப்பண்ணுவார்; அந்நியரும் அவர்களோடு சேர்க்கையாகி யாக்கோபின் வம்சத்தோடே கூடிக்கொள்வார்கள்.

2. ஜனங்கள் அவர்களை அழைத்துக்கொண்டுபோய் அவர்கள் ஸ்தானத்தில் விடுவார்கள்; இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருடைய தேசத்திலே அவர்களை வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கையாண்டு, தங்களைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கி, தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள்.
3. கர்த்தர் உன் துக்கத்தையும் உன் தத்தளிப்பையும், நீ அடிமையாக்கப்பட்டிருந்த கடினமான அடிமைத்தனத்தையும் நீக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும் அக்காலத்திலே,

4. நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே!

5. கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.

6. உக்கிரங்கொண்டு ஓயாத அடியாய் ஜனங்களை அடித்து, கோபமாய் ஜாதிகளை அரசாண்டவன், தடுப்பாரில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்.

7. பூமிமுழுதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாய் முழங்குகிறார்கள்.

8. தேவதாரு விருட்சங்களும், லீபனோனின் கேதுருக்களும் உன்னிமித்தம் சந்தோஷப்பட்டு, நீ விழுந்துகிடந்தது முதற்கொண்டு எங்களை வெட்டவருவார் ஒருவரும் இல்லை என்று சொல்லுகிறது.

9. கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப்பண்ணுகிறது.

10. அவர்களெல்லாரும் உன்னை நோக்கி: நீயும் எங்களைப்போல பலட்சயமானாயோ? எங்களுக்குச் சமானமானாயோ? என்று சொல்லுவார்கள்.

11. உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.

12. அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!

13. நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,

14. நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.

15. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.

16. உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக் குறித்துச் சிந்தித்து இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து,

17. உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.

18. ஜாதிகளுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.

19. நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் உடுப்பைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டாய்.

20. நீ அவர்களோடே அடக்கம்பண்ணப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை.

21. அவன் புத்திரர் எழும்பித் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, உலகத்தைப் பட்டணங்களால் நிரப்பாதபடிக்கு, அவர்கள் பிதாக்களுடைய அக்கிரமத்தினிமித்தம் அவர்களைக் கொலைசெய்ய ஆயத்தம்பண்ணுங்கள்.

22. நான் அவர்களுக்கு விரோதமாய் எழும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோனுடைய பேரையும், அதில் மீந்திருக்கிறதையும், புத்திரனையும் பௌத்திரனையும் சங்கரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.

23. அதை முள்ளம்பன்றிகளுக்குச் சுதந்தரமும், தண்ணீர் நிற்கும் பள்ளங்களுமாக்கி, அதைச் சங்காரம் என்னும் துடைப்பத்தினால் பெருக்கிவிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

24. நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார்.

25. அசீரியனை என் தேசத்திலே முறித்து, என் மலைகளின்மேல் அவனை மிதித்துப்போடுவேன்; அப்பொழுது அவனுடைய நுகம் அவர்கள்மேலிருந்து விலகி, அவனுடைய சுமை அவர்கள் தோளிலிருந்து நீங்கும்.

26. தேசமனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட யோசனை இதுவே; சகல ஜாதிகள்மேலும் நீட்டப்பட்டிருக்கிற கையும் இதுவே என்றார்.

27. சேனைகளின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்?

28. ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருஷத்திலே உண்டான பாரம் என்னவென்றால்:

29. முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று அக்களிப்பாயிராதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும்.

30. தரித்திரரின் தலைப்பிள்ளைகள் திருப்தியாய்ப் புசித்து, எளியவர்கள் சுகமாய்ப் படுத்திருப்பார்கள்; உன்வேரைப் பஞ்சத்தினாலே சாகப்பண்ணுவேன், உன்னில் மீதியானவர்களை அவன் கொன்றுபோடுவான்.

31. வாசலே அலறு; நகரமே கதறு; பெலிஸ்தியாவே, நீ முழுதும் கரைந்துபோகிறாய்; ஏனென்றால், வடக்கே இருந்து புகைக்காடாய் வருகிறான்; அவன் கூட்டங்களில் தனித்தவனில்லை.

32. இப்போதும் இந்த ஜாதியின் ஸ்தானாபதிகளுக்கு என்ன மாறுத்தரவு சொல்லப்படும்? கர்த்தர் சீயோனை அஸ்திபாரப்படுத்தினார்; அவருடைய ஜனத்தில் சிறுமையானவர்கள் அதிலே திடன்கொண்டு தங்குவார்கள் என்பதே.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo