Isaiah-43 – ஏசாயா-43
1. இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும் இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.
2. நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.
3. நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன்.
4. நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்.
5. பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.
6. நான் வடக்கை நோக்கி கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்,
7. நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்.
8. கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும், காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள்.
9. சகல ஜாதிகளும் ஏகமாய்ச் சேர்ந்துகொண்டு, சகல ஜனங்களும் கூடிவரட்டும்; இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு மெய்யென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து யதார்த்தவான்களாய் விளங்கட்டும்.
10. நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
11. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
12. நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே, தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13. நாள் உண்டகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?
14. நான் உங்களுக்காக அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர் படவுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
15. நானே உங்கள் பரிசுத்தராகிய கர்த்தரும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர்.
16. சமுத்திரத்திலே வழியையும் வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி,
17. இரதங்களையும் குதிரைகளையும் இராணுவங்களையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படப்பண்ணி, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்துகிடக்கவும், ஒரு திரி அணைந்து போகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும்பண்ணுகிற கர்த்தர் சொல்லுகிறதாவது:
18. முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.
19. இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
20. நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.
21. இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்.
22. ஆனாலும் யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை; இஸ்ரவேலே, நீ என்னைக்குறித்து மனஞ்சலித்துப்போனாய்.
23. உன் ஆடுகளை தகனபலிகளாக நீ எனக்குச் செலுத்தவில்லை; உன் பலிகளாலே நீ என்னைக் கனம்பண்ணவுமில்லை; காணிக்கைகளைச் செலுத்தும்படி நான் உன்னைச் சங்கடப்படுத்தாமலும், தூபங்காட்டும்படி உன்னை வருத்தப்படுத்தாமலும் இருந்தேன்.
24. நீ எனக்குப் பணங்களால் சுகந்தபட்டயைக் கொள்ளாமலும், உன் பலிகளின் நிணத்தினால் என்னைத் திருப்தியாக்காமலும், உன் பாவங்களினால் என்னைச் சங்கடப்படுத்தி, உன் அக்கிரமங்களினால் என்னை வருத்தப்படுத்தினாய்.
25. நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.
26. நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும்படி உன் காரியத்தைச் சொல்.
27. உன் ஆதிதகப்பன் பாவஞ்செய்தான்; உனக்கு முன்னின்று பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினார்கள்.
28. ஆகையால், நான் பரிசுத்தஸ்தலத்தின் தலைவர்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, யாக்கோபைச் சாபத்துக்கும், இஸ்ரவேலை நிந்தனைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Isaiah-34 - ஏசாயா-34
Tags: Tamil Bible