LEVITICUS-26 – லேவியராகமம்-26

LEVITICUS-26 – லேவியராகமம்-26

1. நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

2. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.

3. நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால்,

4. நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழைபெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்.

5. திராட்சப்பழம் பறிக்குங்காலம்வரைக்கும் போரடிப்புக்காலம் இருக்கும்; விதைப்புக்காலம் வரைக்கும் திராட்சப்பழம் பறிக்குங்காலம் இருக்கும்; நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.

6. தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை.

7. உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.

8. உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத்துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.

9. நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன்.

10. போனவருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள்.

11. உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை.

12. நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.

13. நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.

14. நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்,

15. என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்:

16. நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்ணுவேன்; நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும்; உங்கள் சத்துருக்கள் அதின் பலனைத் தின்பார்கள்.

17. நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன்; உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படுவீர்கள்; உங்கள் பகைஞர் உங்களை ஆளுவார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள்.

18. இவ்விதமாய் நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடாதிருந்தால்,உங்கள் பாவங்களினிமித்தம் பின்னும் ஏழத்தனையாக உங்களைத் தண்டித்து,

19. உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப்போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன்.

20. உங்கள் பெலன் விருதாவிலே செலவழியும்; உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் கனிகளையும் கொடுக்கமாட்டாது.

21. நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத் தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி,

22. உங்களுக்குள்ளே வெளியின் துஷ்டமிருகங்களை வரவிடுவேன்; அவைகள் உங்களைப் பிள்ளைகளற்றவர்களாக்கி, உங்கள் மிருக ஜீவன்களை அழித்து, உங்களைக் குறைந்துபோகப்பண்ணும், உங்கள் வழிகள் பாழாய்க்கிடக்கும்.

23. நான் செய்யும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,

24. நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவத்தினிமித்தம் ஏழத்தனையாக வாதித்து,

25. என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரப்பண்ணி, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.

26. உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை நான் முறித்துப்போடும்போது, பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்

27. இன்னும் இவைகள் எல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,

28. நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டிப்பேன்.

29. உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்தியின் மாம்சத்தையும் புசிப்பீர்கள்.

30. நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை நிர்த்தூளியாக்கி, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை அரோசிக்கும்.

31. நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழுமாக்கி, உங்கள் சுகந்த வாசனையை முகராதிருப்பேன்.

32. நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரமிப்பார்கள்.

33. ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும்.

34. நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்;

35. நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருஷங்களில் ஓய்வடையாதபடியினாலே, அது பாழாய்க்கிடக்கும் நாளெல்லாம் ஓய்வடைந்திருக்கும்.

36. உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சியடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.

37. துரத்துவார் இல்லாமல், பட்டயத்துக்கு முன் விழுவதுபோல, ஒருவர்மேல் ஒருவர் இடறி விழுவார்கள்; உங்கள் சத்துருக்களுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இராது.

38. புறஜாதிகளுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிக்கும்.

39. உங்களில் தப்பினவர்கள் தங்கள் அக்கிரமங்களினிமித்தமும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினிமித்தமும், உங்கள் சத்துருக்களின் தேசங்களில் வாடிப்போவார்கள்.

40. அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமன்றி,

41. அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால்,

42. நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்.

43. தேசம் அவர்களாலே விடப்பட்டு, பாழாய்க்கிடக்கிறதினாலே தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அவர்கள் என் நியாயங்களை அவமதித்து, அவர்களுடைய ஆத்துமா என் கட்டளைகளை வெறுத்தபடியினால் அடைந்த தங்களுடைய அக்கிரமத்தின் தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொள்ளுவார்கள்.

44. அவர்கள் தங்கள் சத்துருக்களின் தேசத்திலிருந்தாலும், நான் அவர்களை நிர்மூலமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களோடே பண்ணின என் உடன்படிக்கையை அபத்தமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களைக் கைவிடவும் வெறுக்கவுமாட்டேன்; நான் அவர்கள் தேவனாகிய கர்த்தர்.

45. அவர்களுடைய தேவனாயிருக்கும்படிக்கு, நான் புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக எகிப்து தேசத்திலிருந்து அவர்களைப் புறப்படச்செய்து, அவர்களுடைய முன்னோர்களோடே நான் பண்ணின உடன்படிக்கையை அவர்கள் நிமித்தம் நினைவுகூருவேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.

46. கர்த்தர் தமக்கும் இஸ்ரவேல் சந்ததியாருக்கும் நடுவே இருக்கும்படி மோசேயைக்கொண்டு, சீனாய்மலையின்மேல் கொடுத்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo