Matthew-11 – மத்தேயு-11
1. இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளைகொடுத்து முடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப் போனார்.
2. அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து:
3. வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.
4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்;
5. குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்; தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
6. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்.
7. அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?
8. அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரித்தவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள்.
9. அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம் தீர்க்கத்தரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
10. அதெப்படியெனில், இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய் வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.
11. ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும் பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.
12. யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.
13. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.
14. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.
15. கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
16. இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து தங்கள் தோழரைப்பார்த்து:
17. உங்களுக்காக குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.
18. எப்படியெனில் யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள்.
19. மனுஷகுமாரன் போஜனம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.
20. அப்பொழுது தமது பலத்த செய்கைகளில் அதிகமானவைகளைச் செய்யக் கண்ட பட்டணங்கள், மனந்திரும்பாமற் போனபடியினால், அவைகளை அவர் கடிந்து கொள்ளத்தொடங்கினார்.
21. கொராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.
22. நியாயத்தீர்ப்பு நாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும் தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
23. வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்.
24. நியாயத்தீர்ப்பு நாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
25. அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
26. ஆம் பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
27. சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான்.
28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
29. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
30. என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Matthew-1 - மத்தேயு-1
Tags: Tamil Bible